உஷார்... இவங்க எல்லாம் வெளியே போகாதீங்க... தீபாவளி பட்டாசுகளால் அதிகரிக்கும் காற்று மாசு - மருத்துவர்கள் எச்சரிக்கை!
தீபாவளிப் பண்டிகையையொட்டி பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கியுள்ளதால், சென்னை மாநகரில் காற்றின் மாசு அளவு கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், நகரின் பல்வேறு இடங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. நேற்று 56 ஆகப் பதிவாகியிருந்த காற்றின் தரக் குறியீடு, பட்டாசு வெடிப்பு காரணமாக இன்று 71 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை வானிலையில் ஏற்கனவே மேகமூட்டம் நிலவி வரும் நிலையில், பட்டாசுப் புகையும் அதனுடன் கலந்திருப்பதால் பல முக்கியச் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெளிவாகத் தெரியாத அளவுக்குப் அடர் புகைமூட்டம் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே மெதுவாகப் பயணித்து வருகின்றனர்.
காற்றில் மாசின் அளவு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, சுகாதார வல்லுநர்கள் மற்றும் மருத்துவர்கள் பொதுமக்களுக்குச் சில முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
குறிப்பாக ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு, சைனஸ் மற்றும் சுவாசப் பிரச்சனைகள் கொண்டவர்கள் வெளியீட்டிற்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் அல்லது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பட்டாசுப் புகை அதிகம் உள்ள இடங்களில் நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.