உஷார்... வாட்ஸ்அப் KYC செய்திகளை நம்பாதீங்க... வாடிக்கையாளர்களுக்கு பிரபல வங்கி எச்சரிக்கை!

 

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (TMB) தனது வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கைப் பாதுகாக்கும் பொருட்டு, வாட்ஸ்அப் வழியாகப் பரப்பப்படும் போலி KYC குறுஞ்செய்திகள் குறித்து அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மோசடிக்காரர்கள் "TMB MBANK" என்ற பெயரில் வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள். அதில், "உங்கள் கேஓய்சி (KYC) காலாவதியாகிவிட்டது, உடனடியாகப் புதுப்பிக்காவிட்டால் கணக்கு முடக்கப்படும்" என்று அச்சமூட்டுகிறார்கள். பின்னர், "TMB MBank.apk" என்ற கோப்பை அனுப்பி அதைத் தரவிறக்கம் செய்யச் சொல்கிறார்கள்.

இந்த .apk கோப்பை உங்கள் மொபைலில் நிறுவினால், மோசடிக்காரர்கள் உங்கள் மொபைலைத் தூரத்திலிருந்தே இயக்க முடியும். இதன் மூலம், உங்கள் மொபைலுக்கு வரும் OTP செய்திகளை அவர்களால் படிக்க முடியும். உங்கள் வங்கிப் பரிவர்த்தனை ரகசிய எண்களைத் திருட முடியும். உங்களின் அனுமதியின்றி உங்கள் கணக்கிலிருந்து பணத்தைப் பறிக்க முடியும்.

பாதிக்கப்பட்டால் என்ன செய்வது?

உங்கள் கணக்கில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனை நடந்தால் அல்லது நீங்கள் தவறுதலாக இத்தகைய செயலிகளை நிறுவியிருந்தால்: உடனடியாக வங்கியின் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளவும். தேசிய சைபர் குற்றப் புகார் எண்ணான 1930-க்கு அழைத்து புகார் அளிக்கவும். www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யவும்.