உஷார்... நிறைய நீர் பருகுங்க... தமிழகத்தில் 3 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டியது வெப்பம்!
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நேற்று தமிழகத்தின் மூன்று முக்கிய மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி 'சதம்' அடித்துள்ளது.
மார்ச் மாதம் பிறந்தவுடனேயே தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தீவிரமடைய ஆரம்பித்துள்ளது. வானிலை ஆய்வு மையத் தரவுகளின்படி, நேற்று ஒரே நாளில் மூன்று இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியுள்ளது.
தமிழகத்திலேயே மிக அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கரூர் (பராமத்தி) பகுதியிலும் 100.4 டிகிரி பாரன்ஹீட் அளவில் வெயில் பதிவாகியுள்ளது.
சதம் அடிக்கவில்லை என்றாலும், மற்ற நகரங்களிலும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. திருச்சி மற்றும் மதுரை (விமான நிலையம்): 99.68 டிகிரி பாரன்ஹீட். சென்னை மற்றும் தர்மபுரி: 98.6 டிகிரி பாரன்ஹீட்.
வெப்பம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்: போதிய அளவு தண்ணீர், இளநீர் மற்றும் மோர் அருந்தி உடலை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். மதிய நேரங்களில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பருத்தி ஆடைகளை அணிவது மற்றும் குடை அல்லது தொப்பியைப் பயன்படுத்துவது சிறந்தது.
கோடைக்காலம் முழுமையாகத் தொடங்க இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில், இப்போதே வெயில் 105 டிகிரியை எட்டியிருப்பது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாட்களில் வெப்பத்தின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.