உஷார்... நாடு முழுவதும் 159 மருந்துகள் தரமற்றவை - மருந்து கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை!
இந்தியாவில் சளி, காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம் மற்றும் கிருமித் தொற்று சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் 159 மருந்து மாதிரிகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள மருந்துப் பரிசோதனை ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான மாதிரி ஆய்வுகளில் இத்தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன. மத்திய மருந்துப் பரிசோதனை ஆய்வகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 27 மருந்து மாதிரிகள் தரமற்றவை என உறுதி செய்யப்பட்டுள்ளன.
பல்வேறு மாநில மருந்துப் பரிசோதனை ஆய்வகங்கள் நடத்திய சோதனையில் 132 மருந்து மாதிரிகள் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. பராசிட்டமால், ரானிடின், பிரஷர் மாத்திரைகள் மற்றும் ஆன்டிபயாடிக் வகையைச் சேர்ந்த குறிப்பிட்ட உற்பத்தித் தொகுதிகள் ஆய்வில் தோல்வியடைந்துள்ளன.
மருந்துக் கடைகளில் மருந்துகளை வாங்கும் போது அவற்றின் உற்பத்தி எண் மற்றும் காலாவதி தேதியைச் சரிபார்த்து வாங்குமாறும், இதுபோன்ற தரமற்ற மருந்துகள் குறித்துக் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறும் மருந்து கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.