உஷார்... அடுத்த 3 நாட்களுக்கு 105 டிகிரியில் தகிக்கும் தமிழகம் - தர்பூசணி முதல் நுங்கு வரை பிஸினஸ் அமோகம்!

 

தமிழகத்தில் கோடை காலம் தன் கோர முகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டது. "வெயில்னா இதுதான்டா வெயில்" என்று சொல்லும் அளவுக்கு, சித்திரை முதல் நாளிலேயே சூரியன் சுளீர் என உதித்து, மக்களை வீட்டுக்குள்ளேயே முடக்கிப் போட்டுள்ளது. தேர்தல் காய்ச்சல் ஒரு பக்கம் என்றால், இந்த 'வெயில் காய்ச்சல்' மறுபக்கம் மக்களை வறுத்து எடுத்து வருகிறது.

நேற்று (ஏப். 13) நிலவரப்படி, தமிழகத்தின் மூன்று முக்கிய மாவட்டங்களில் வெயில் 105 டிகிரியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. வறண்ட வானிலை காரணமாகப் பூமியின் வெப்பம் தணியாமல், அனல் காற்றாக வீசி வருகிறது.

இன்று (ஏப். 14) சித்திரை திருநாளில், வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துக் காணப்படுகிறது. "இப்போதே இப்படி என்றால், இனி எப்படி?" என மக்கள் அலறும் வகையில், வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி வரை இதே தகிக்கும் வெப்பநிலை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் 'பகீர்' கிளப்பியுள்ளது.

வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் குளிர்பானக் கடைகளை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். வெயிலைப் பயன்படுத்தி தர்பூசணி, நுங்கு மற்றும் இளநீரின் விலையும் 'சரவெடியாக' ஏறி வருகிறது.