உஷார்... மார்ச் 1 முதல் சிலிண்டர் முதல் பி.எஃப் பணம் வரை.. அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!
அடுத்த இரு தினங்களில் மார்ச் மாதம் துவங்கவுள்ள நிலையில், சாமானிய மக்களின் பட்ஜெட் மற்றும் அன்றாடச் செயல்பாடுகளில் முக்கிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. சிலிண்டர் விலை முதல் பிஎஃப் பணம் எடுக்கும் முறை வரை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மாற்றங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். பிப்ரவரி மாதம் முடிவுக்கு வரும் நிலையில், மார்ச் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த மாற்றங்கள் உங்கள் பாக்கெட்டை நேரடியாகப் பாதிக்கக்கூடும்.
1. எரிவாயு சிலிண்டர் விலை மாற்றம்:
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றியமைப்பது வழக்கம். கடந்த மாதம் வணிக ரீதியிலான சிலிண்டர் விலை உயர்ந்த நிலையில், இந்த மார்ச் மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறையுமா அல்லது உயருமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து இந்த அறிவிப்பு மார்ச் 1 அதிகாலை வெளியாகும்.
2. பிஎஃப் (PF) கணக்குதாரர்களுக்குப் புதிய வசதி:
அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய நற்செய்தி. இதுவரை பிஎஃப் பணத்தைப் பெறுவதற்கு இருந்த சிக்கலான நடைமுறைகள் எளிமையாக்கப்பட உள்ளன. மார்ச் முதல் ஊழியர்கள் தங்கள் பிஎஃப் பணத்தை ஏடிஎம் மற்றும் யுபிஐ செயலிகள் மூலமாகவே நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் புதிய தொழில்நுட்ப வசதி அறிமுகமாகிறது. அவசரத் தேவைகளுக்குப் பணம் தேவைப்படும் ஊழியர்களுக்கு இந்த நடைமுறை பெரும் உதவியாக இருக்கும்.
3. ரயில்வே பயணிகளுக்குப் புதிய 'ரயில் ஒன்' செயலி:
ரயில் பயணிகளுக்கான முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்கும் முறையில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை பயன்பாட்டில் இருந்த யுடிஎஸ் செயலி மார்ச் 1ம் தேதி முதல் முழுமையாகச் செயல் இழக்கும். அதற்குப் பதிலாக, மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் 'ரயில் ஒன்' (Rail One) என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்படுகிறது. பயணிகள் தடையின்றி டிக்கெட் எடுக்க இந்தப் புதிய செயலியைப் பதிவிறக்கம் செய்வது அவசியம்.