உஷார்.. ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும் 10 முக்கிய மாற்றங்கள்!
ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்தியாவில் புதிய வருமான வரிச் சட்டம் (Income Tax Act, 2025) அமலுக்கு வருவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிதி மற்றும் வங்கி நடைமுறை மாற்றங்கள் நிகழவுள்ளன.
1. புதிய வருமான வரிச் சட்டம் (Income Tax Act, 2025):
சுமார் 60 ஆண்டுகாலப் பழைய 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக, எளிமையாக்கப்பட்ட புதிய வருமான வரிச் சட்டம் 2025 அமலுக்கு வருகிறது. இது வரி அடுக்குகளை மாற்றவில்லை என்றாலும், வரி தாக்கல் செய்யும் முறையை முற்றிலும் எளிமையாக்குகிறது.
2. 'வரி ஆண்டு' அறிமுகம்:
இதுவரை இருந்த 'நிதியாண்டு' மற்றும் 'மதிப்பீட்டு ஆண்டு' என்ற குழப்பமான நடைமுறை நீக்கப்பட்டு, இனி 'வரி ஆண்டு' என்ற ஒற்றை முறை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.
3. ஃபார்ம் 16 இடத்தைப் பிடிக்கும் 'ஃபார்ம் 130':
சம்பளம் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மிக முக்கியமான ஆவணமான ஃபார்ம் 16, இனி ஃபார்ம் 130 என மாற்றப்படும். இது டிஜிட்டல் முறையில் தானாகவே உருவாக்கப்படும்.
4. மெட்ரோ நகரங்களின் பட்டியலில் சென்னை உள்ளிட்ட 4 புதிய நகரங்கள்:
வீட்டு வாடகை வரி விலக்கு கணக்கீட்டில், இதுவரை டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய 4 நகரங்களுக்கு மட்டுமே 50% சலுகை இருந்தது. இனி இந்த பட்டியலில் பெங்களூரு, புனே, ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களும் சேர்க்கப்படுவதால் அங்குள்ள ஊழியர்கள் அதிக வரிச் சலுகை பெறலாம்.
5. வங்கி ஏடிஎம் கட்டண உயர்வு:
இலவச ஏடிஎம் பரிவர்த்தனை வரம்பிற்குப் பிறகு வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.21-லிருந்து ரூ.23 ஆக உயர்த்தப்படுகிறது.
ஏடிஎம்-ல் யுபிஐ மூலம் பணம் எடுப்பதும் இனி வழக்கமான ஏடிஎம் பரிவர்த்தனைக் கணக்கிலேயே சேர்க்கப்படும் (எச்.டி.எப்.சி போன்ற வங்கிகள் இதனை அறிவித்துள்ளன).
6. பான் கார்டு விண்ணப்பத்தில் மாற்றம்:
ஏப்ரல் 1 முதல் புதிய பான் கார்டு விண்ணப்பிக்க ஆதார் மட்டும் போதாது; பிறப்புச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை போன்ற கூடுதல் ஆவணங்கள் தேவைப்படும். மேலும், பான் கார்டில் உள்ள பெயர் கண்டிப்பாக ஆதாரில் உள்ளது போலவே இருக்க வேண்டும்.
7. டிஜிட்டல் பரிவர்த்தனையில் கூடுதல் பாதுகாப்பு:
ஆன்லைன் மற்றும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பு கட்டாயமாக்கப்படுகிறது. இனி ஓடிபி உடன் கைரேகை அல்லது பின் (PIN) போன்ற கூடுதல் சரிபார்ப்பு முறை அவசியமாகும்.
8. பங்குச் சந்தை வரி உயர்வு:
பங்குச் சந்தையில் ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (Futures & Options) வர்த்தகம் செய்பவர்களுக்கான பரிவர்த்தனை வரி உயர்த்தப்படுகிறது. இது வர்த்தகர்களுக்கான செலவை அதிகரிக்கும்.
9. கல்வி மற்றும் விடுதி உதவித்தொகை உயர்வு:
பழைய வரி முறையைப் பின்பற்றுபவர்களுக்கு, குழந்தைகளின் கல்விக்கான வரி விலக்கு வரம்பு மாதம் ரூ.100-லிருந்து ரூ.3,000 ஆகவும், விடுதிச் செலவு வரம்பு மாதம் ரூ.300-லிருந்து ரூ.9,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
10. ஜிஎஸ்டி 2.0:
ஜிஎஸ்டி வரி அடுக்குகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு, 12% வரி அடுக்கு நீக்கப்படலாம். பெரும்பாலான பொருட்கள் 5%, 18% அல்லது 40% (ஆடம்பரப் பொருட்கள்) ஆகிய அடுக்குகளுக்குள் கொண்டு வரப்படும்.
இவை தவிர மத்திய ஆசிய போர் பதற்றத்தால் சிலிண்டர் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் கட்டண உயர்வு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைப் போலவே ஏப்ரல் 1ம் தேதி முதல் பாஸ்ட் டேக் கட்டணமும் உயர்கிறது.