உஷார்... ஓட்டுப் போடும்போது செல்ஃபி எடுத்தால் 3 மாதம் சிறை... என்னவெல்லாம் செய்யக் கூடாது?!

 

இன்றைய டிஜிட்டல் உலகில், சாப்பிடுவது முதல் தூங்குவது வரை அனைத்தையும் சமூக வலைதளங்களில் பகிரும் இளைஞர்களுக்குத் தேர்தல் ஆணையம் ஒரு சீரியஸ் எச்சரிக்கையை விடுத்துள்ளது. வாக்குச்சாவடிக்குள் நுழைந்து ஓட்டுப் போடும்போது, ஆர்வக்கோளாறால் செல்பி எடுத்தாலோ அல்லது வீடியோ எடுத்தாலோ, 3 மாதம் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, வாக்குப்பதிவு ரகசியத்தை மீறுவது கடும் குற்றமாகும்.

வாக்குச்சாவடிக்குள் மொபைல் போன் மட்டுமல்ல, கேமரா மற்றும் நவீன 'ஸ்மார்ட் வாட்ச்' உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. "நான் இவருக்குத்தான் ஓட்டுப் போட்டேன்" என எந்திரத்தின் பட்டனை அழுத்தும்போது புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டால், உடனடியாகக் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். சிறை தண்டனை மற்றும் அபராதம் மட்டுமின்றி, எதிர்காலத் தேர்தல்களில் வாக்களிக்க முடியாதபடி தகுதி நீக்கம் செய்யவும் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.

என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

வாக்குப்பதிவு இயந்திரம் அருகே மொபைல் போனைப் பயன்படுத்துவது, புகைப்படம் எடுப்பது முற்றிலும் தடை. உங்கள் விரலில் இடப்பட்ட மையைக்காட்டிப் பெருமையுடன் செல்ஃபி எடுக்க விரும்பினால், தாராளமாக வாக்குச்சாவடிக்கு வெளியே வந்து எடுத்துக் கொள்ளலாம்.

"ஆர்வக்கோளாறால் சட்டச் சிக்கலில் சிக்கி உங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்ளாதீர்கள்" என தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பல வாக்குச்சாவடிகளில் இதற்காகவே செல்போன்களை ஒப்படைக்கப் பாதுகாப்பு பைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, ஜனநாயகக் கடமையைச் சட்டப்படி ஆற்றிவிட்டு, வெளியே வந்து உங்கள் பெருமையை சமூக வலைதளங்களில் பகிருங்கள்!