உஷார்.. சிறுநீரில் இரத்தமா? அலட்சியப்படுத்தாதீங்க...10ல் ஒருவர் 3 மாதங்களில் உயிரிழப்பு - ஆய்வில் அதிர்ச்சி!

 

சிறுநீரில் இரத்தம் தென்படுவது என்பது ஏதோ ஒரு சாதாரணத் தொற்று அல்லது உடல் வெப்பத்தினால் ஏற்படுவது என்று நாம் கடந்து போகலாம். ஆனால், சர்வதேச அளவில் 380 மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில், இது மரணத்திற்கான ஒரு முக்கிய எச்சரிக்கை மணி என்று தெரிய வந்திருக்கிறது. 

ஆய்வின் அதிர்ச்சியூட்டும் முடிவுகள்

ஐரோப்பிய சிறுநீரகவியல் சங்க மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வின்படி, சிறுநீரில் இரத்தம் தென்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வரும் 10 நோயாளிகளில் ஒருவர், அடுத்த 3 மாதங்களுக்குள் உயிரிழக்க நேரிடுகிறது. சிறுநீரில் இரத்தம் தென்படும் 4 நோயாளிகளில் ஒருவருக்குச் சிறுநீர்ப்பைப் புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்பு மிக அதிகம். இந்த உயர் இறப்பு விகிதத்திற்குப் புற்றுநோயின் தீவிரம் ஒரு காரணம் என்றாலும், நோயைக் கண்டறிவதில் ஏற்படும் காலதாமதமே மிக முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

ஹீமாடூரியா (Haematuria) என்றால் என்ன?

மருத்துவ ரீதியாகச் சிறுநீரில் இரத்தம் கலந்து வருவதை 'ஹீமாடூரியா' என்று அழைக்கிறார்கள். இது இளஞ்சிவப்பு, அடர் சிவப்பு அல்லது கோலா நிறத்தில் இருக்கலாம். பல நேரங்களில் இந்த இரத்தம் வலியின்றி வெளியேறும். வலி இல்லாத காரணத்தாலேயே நோயாளிகள் இது ஒரு பெரிய பாதிப்பு இல்லை என்று நினைத்து மருத்துவரிடம் செல்வதைத் தவிர்க்கிறார்கள். ஆனால் வலியற்ற இரத்தப்போக்கு தான் புற்றுநோயின் மிக முக்கியமான அறிகுறி என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவில் சிறுநீர்ப்பைப் புற்றுநோயின் நிலை

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ICMR) தரவுகளின்படி, இந்தியாவில் ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் இது 9-வது இடத்தில் உள்ளது. மொத்த புற்றுநோய் பாதிப்புகளில் 3.9% சிறுநீர்ப்பைப் புற்றுநோயால் ஏற்படுகிறது. 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் தொழில்துறை சார்ந்த நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.

ஏன் இது பெரும்பாலும் தாமதமாகக் கண்டறியப்படுகிறது?

இதற்குப் பல சமூக மற்றும் மருத்துவக் காரணங்கள் உள்ளன.  ஒருமுறை இரத்தம் வரும், பிறகு பல வாரங்களுக்கு வராது. இதனால் உடல் சரியாகிவிட்டது என்று நோயாளி தவறாக எண்ணுகிறார். சிறுநீர் எரிச்சல் அல்லது இரத்தம் வரும்போது, அது சிறுநீர்ப் பாதை தொற்று (UTI) என்று கருதப்பட்டு ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்படுகின்றன. மேலதிகப் பரிசோதனைகள் செய்யப்படாத போது புற்றுநோய் முற்றி விடுகிறது. ஆரம்பக் கட்டங்களில் உடல் எடை குறைவோ அல்லது இடுப்பு வலியோ இருப்பதில்லை.

ஆபத்துக் காரணிகள்

சிறுநீர்ப்பைப் புற்றுநோய் ஏற்பட மிக முக்கியமான இரண்டு காரணங்கள் உள்ளன. 50% முதல் 60% பாதிப்புகளுக்குப் புகையிலை தான் காரணம். புகையிலையில் உள்ள நச்சுக்கள் சிறுநீரகங்களால் வடிகட்டப்பட்டுச் சிறுநீர்ப்பையில் தேங்கும்போது, அதன் உட்புறச் சுவரைப் பாதித்துப் புற்றுநோயை உருவாக்குகிறது. சாயம், ரப்பர், தோல் பொருட்கள் மற்றும் பெயிண்ட் தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களுக்கு வேதிப்பொருட்களின் வெளிப்பாட்டினால் இந்த அபாயம் அதிகம்.

முன்கூட்டியே கண்டறிவதன் அவசியம்

சிறுநீர்ப்பைப் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 96% ஆக உள்ளது. சிகிச்சை: ஆரம்ப நிலையில் அறுவை சிகிச்சை மற்றும் இம்யூனோதெரபி மூலம் இதைக் குணப்படுத்தலாம். CT ஸ்கேன் அல்லது சிஸ்டோஸ்கோபி போன்ற பரிசோதனைகளை 48 மணி நேரத்திற்குள் மேற்கொள்வது உயிர் காக்க உதவும்.

பிரபல மருத்துவர்கள், 45 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் ஆண்டுக்கு ஒருமுறை சிறுநீர் மற்றும் பி.எஸ்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். சிறுநீரில் ஒருமுறை இரத்தம் வந்தாலும் அதைச் சாதாரணத் தொற்று என்று கருதாமல் உடனடியாகச் சிறுநீரகவியல் நிபுணரை அணுக வேண்டும் என்றும், அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீர்ப்பையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் என்றும் கூறுகிறார்கள்.

"ஒரே ஒரு முறைதானே இரத்தம் வந்தது" என்ற எண்ணம் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். நவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் மூலம் இன்று சிறுநீர்ப்பைப் புற்றுநோயை முழுமையாகக் குணப்படுத்த முடியும். ஆனால், அதற்குத் தேவை 'ஆரம்பகால விழிப்புணர்வு' மட்டுமே.