உஷார்... பாகிஸ்தான் 'பேர்னஸ்' கிரீமால் சிறுநீரகம் பாதிப்பு - உங்கள் கிரீம் பாதுகாப்பானது தானா?
சிவப்பாக மாற வேண்டும் என்ற ஆசையில் பாகிஸ்தான் தயாரிப்பு அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்திய இருவருக்குச் சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தற்போதைய மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் (முன்பு அவுரங்காபாத்), கடந்த சில நாட்களாகப் பாகிஸ்தானைச் சேர்ந்த குறிப்பிட்ட சில 'பேர்னஸ்' கிரீம்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்திய சில இளைஞர்களுக்குத் தோல் அலர்ஜி மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்களது சிறுநீரகச் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர். இந்தக் கிரீம்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகப்படியான பாதரசம் மற்றும் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டிருப்பதே இதற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
இது குறித்த புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, சிட்டி சௌக் போலீசார் ஷாகஞ்ச் மற்றும் சிட்டி சென்டர் மால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். சுமார் ₹60,000 மதிப்பிலான கோல்டன் பேர்ல், சந்த்னி, நூூர் ஹெர்பல், பேஸ் பிரஷ், ஜலக் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் தயாரிப்பு கிரீம்கள், சோப்புகள் மற்றும் சீரம்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர். தடையை மீறி இந்தப் பொருட்களை விற்பனை செய்த மூன்று வியாபாரிகளைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் பாகிஸ்தான் பொருட்களுக்குத் தடை உள்ள நிலையில், இவை 'ஹவாலா' முறையிலோ அல்லது பிற நாடுகள் வழியாகவோ கடத்தி வரப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது வேண்டுமென்றே இந்தியர்களின் ஆரோக்கியத்தைச் சிதைக்கத் திட்டமிட்டுச் செய்யப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
குறுகிய காலத்தில் சிவப்பாக மாற வேண்டும் என்பதற்காகத் தரமற்ற கிரீம்களைப் பயன்படுத்துவது உயிருக்கே ஆபத்தாக முடியும் எனத் தோல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். "பாதரசம் கலந்த கிரீம்கள் தோலின் வழியாக ரத்தத்தில் கலந்து நேரடியாகச் சிறுநீரகங்களைச் சிதைக்கும்" என அவர்கள் கூறுகின்றனர்.