உஷார்... இன்று முதல் அமலுக்கு வரும் முக்கிய நடைமுறை மாற்றங்கள்!
இன்று நவம்பர் 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி, பாஸ்டேக், டாஸ்மாக், ஆட்டோ கட்டணம் மற்றும் ஆவணப் பதிவு ஆகிய துறைகளில் பல்வேறு புதிய விதிமுறைகளும் கட்டண மாற்றங்களும் நடைமுறைக்கு வருகின்றன.
1. ஜி.எஸ்.டி விதிமுறைகளில் தளர்வு:
மத்திய அரசின் அறிவிப்புப்படி, விற்பனைக்குப் பிந்தைய தள்ளுபடிக்கு முன்பு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற விதிமுறை தளர்த்தப்படுகிறது. இந்த மாற்றத்தால் மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விரைவாக விற்பனை செய்யும் நிறுவனங்கள் பெரும் பயனடையும். சிறு ஏற்றுமதியாளர்கள் மற்றும் இ-வணிக விற்பனையாளர்களுக்கான விதிமுறைகளும் எளிய முறையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
2. உள்ளூர் பாஸ்டேக் புதிய சலுகைக் கட்டணம்:
மத்திய சாலை போக்குவரத்துத் துறை, சுங்கச்சாவடிகளுக்கு 20 கி.மீ சுற்றளவில் வசிக்கும் வணிகச் சார்பற்ற வாகன உரிமையாளர்களுக்காக உள்ளூர் FASTag திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது: நகராட்சி/உள்ளூர் எல்லைக்குள் இருப்பவர்களுக்கு: வருடாந்திர கட்டணம் ₹3,000. நகராட்சி எல்லைக்கு வெளியே (20 கி.மீ-க்குள்) இருப்பவர்களுக்கு: வருடாந்திர கட்டணம் ₹1,500.
3. டாஸ்மாக்கில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை கட்டாயம்:
டாஸ்மாக் கடைகளில் ₹1,000-க்கு மேல் மதுபானம் வாங்கினால் ரொக்கப் பணம் ஏற்கப்பட மாட்டாது; UPI, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலமாகவே செலுத்த வேண்டும். வரும் 2027 ஜனவரி 1 முதல், இந்த டிஜிட்டல் வரம்பு ₹500-ஆக குறைக்கப்படவுள்ளது. வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், அதிகக் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
4. 13 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணம் உயர்வு:
தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ கட்டணங்களை முறைப்படுத்தி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது: குறைந்தபட்சக் கட்டணம் முதல் 1.8 கி.மீ தூரத்திற்கு ₹50. 1.8 கி.மீ-க்கு மேல் பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் கூடுதல் கட்டணம் ₹25. மலைப்பாதைகள் : குறைந்தபட்சக் கட்டணம்: ₹60 (1.8 கி.மீ வரை). கூடுதல் தூரத்திற்கு கிலோ மீட்டருக்கு ₹30.
5. குடும்ப சொத்து ஆவணங்களுக்குக் காகிதமற்ற பதிவு முறை:
தமிழக வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை அரசாணையின்படி, நாளை நவம்பர் 2ம் தேதி முதல் 4 வகையான குடும்ப சொத்து ஆவணங்களைப் பதிவு செய்யக் காகிதமற்ற பதிவு முறை கட்டாயமாக்கப்படுகிறது.
செட்டில்மென்ட் பத்திரம், விடுவிப்பு பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம், செட்டில்மென்ட் பத்திர ரத்து பத்திரம், பொதுமக்கள் இம்மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.