உஷார்... தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய டோக்கன் முறை - ஆக.1 முதல் அமலுக்கு வருகிறது! 

 

ரயில் நிலைய முன்பதிவு மையங்களில் தட்கல் டிக்கெட் பெறுவதற்காகப் பயணிகள் மணி கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கும் பொருட்டு, மேற்கு மத்திய ரயில்வே ஆகஸ்ட் 1 முதல் புதிய டோக்கன் முறையை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. தட்கல் முன்பதிவு நேரத்திற்கு ஏற்ப டோக்கன்கள் வழங்கப்படும் நேரங்களும் பிரத்யேகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

காலை 8:30 மணி முதல் 9 மணி வரை ஏசி வகுப்புகளுக்கான முன்பதிவுக்கு டோக்கன்கள் வழங்கப்படும். காலை 9 மணி முதல் 9:30 மணி வரை ஏசி அல்லாத வகுப்புகளுக்கான முன்பதிவுக்கு டோக்கன்கள் வழங்கப்படும். இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் டோக்கன்களைப் பெற்றுக் கொள்ளும் பயணிகள், தட்கல் முன்பதிவு தொடங்கும் போது நேரடியாகக் கவுண்டருக்குச் சென்று தங்களது டிக்கெட்டுகளைச் சிரமமின்றி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

டோக்கன் வாங்குவதற்கு ஒரு முறையும், டிக்கெட் எடுப்பதற்கு மற்றொரு முறையும் என இருமுறை அலைய வேண்டிய அவசியம் இனி இருக்காது. முன்கூட்டியே டோக்கன் வழங்கி விடுவதால் கவுண்டர்களில் ஏற்படும் தேவையற்ற கூட்ட நெரிசல் கட்டுப்படுத்தப்படுவதோடு, பயணிகளின் நேரமும் மிச்சமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.