உஷார்... மெட்ரோ ரயிலில்சக பயணிகளுக்கு இடையூறு செய்தால் அபராதம் ரூ. 2,500 ஆக உயர்வு!
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் அமைதியான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்யும் பொருட்டு, மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' சமூக வலைத்தளப் பக்கத்தில் மிக முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரயில் பெட்டிகள் மற்றும் மெட்ரோ வளாகங்களுக்குள் மொபைல் போன்களை அதிக சத்தத்துடன் பயன்படுத்துபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை தற்பொழுது ஐந்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) சட்டம் 2002 பிரிவு 59-ன் கீழ், சக பயணிகளுக்குத் தொந்தரவு விளைவிப்பதோ அல்லது அவர்களின் அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதோ தண்டனைக்குரிய குற்றமாகும் என மெட்ரோ நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பாகப் பின்வரும் செயல்கள் குற்றமாகக் கருதப்படும்.
மொபைல் போன்களில் மற்ற பயணிகளுக்குக் கேட்கும் வண்ணம் மிக உரத்த குரலில் உரையாடுவது. செவியில் பொருத்திக் கொள்ளும் ஒலிபெருக்கி இல்லாமல், மொபைல் போனில் நேரடியாகப் பாடல்கள் கேட்பது அல்லது வீடியோக்களைப் பார்ப்பது. மெட்ரோ ரயில்களிலும் அதன் வளாகங்களிலும் மொபைல் போன்களை 'ஸ்பீக்கர் மோடில்' போட்டுப் பேசுவது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் கடந்த ஜூன் 19, 2026 அன்று வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பின்படி, 'ஜன் விஸ்வாஸ் சட்டம் 2026'-இன் கீழ் ஒரு புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத் திருத்தத்தின்படி, பிரிவு 59-ன் கீழ் மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகங்களில் சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அதிகப்படியான இரைச்சலை ஏற்படுத்துபவர்களுக்கான அபராதத் தொகை, முன்பிருந்த ரூ. 500-லிருந்து தற்பொழுது அதிகபட்சமாக ரூ. 2,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அபராதத் தொகை உயர்த்தப்பட்டதோடு மட்டுமின்றி, இந்த விதிமுறைகளைத் தொடர்ந்து மீறும் பயணிகள் யாராக இருந்தாலும், மெட்ரோ ரயிலின் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளால் மெட்ரோ ரயில் பெட்டியிலிருந்தோ அல்லது நிலைய வளாகத்திலிருந்தோ உடனடியாகக் கழுத்தைப் பிடித்து வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, சக பயணிகளின் பயணச் சூழலையும் அமைதியையும் கருத்தில் கொண்டு, மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகத்திற்குள் பயணிக்கும் போது அனைவரும் கட்டாயம் ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துமாறும், உரத்த குரலில் பேசுவதைத் தவிர்க்குமாறும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.