undefined

ரயில் பயணிகளே உஷார்..  பயணியிடமிருந்து செல்போனை பிடுங்கிய டிக்கெட் பரிசோதகர்.. முற்றிய தகராறு..!

 
ரயில் டிக்கெட் எடுக்கமல் பயணம் செய்த பெண் பயணியின் செல்போனை டிக்கெட் பரிசோதகர் பிடுங்கிக் கொண்டுதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னைஅடுத்த தாம்பரம் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீவித்யா(45). இவர் நேற்று மாலை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் செல்வதற்காக தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயிலில் பயணித்துள்ளார். ரயில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்ற போது டிக்கெட் பரிசோதகர் தேன்மொழி, பயணிகளிடம் டிக்கெட் தணிக்கை செய்துள்ளார். அப்போது ஸ்ரீவித்யா டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து ஸ்ரீவித்யாவிடம் ரூ.500 அபராதம் செலுத்துமாறு அவர் கூறியுள்ளார். அதற்கு தன்னால் அபராதம் செலுத்த முடியாது என ஸ்ரீவித்யா தெரிவித்துள்ளார். இதனையடுத்து டிக்கெட் பரிசோதகர் ஸ்ரீவித்யாவின் செல்போனை பிடுங்கியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறியதை அடுத்து அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் சமாதானம் செய்து ரயிலில் அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, ரயில் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்ற போது டிக்கெட் பரிசோதகர் தேன்மொழி, ஸ்ரீவித்யாவின் செல்போனை எடுத்துக்கொண்டு ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் பரிசோதகர் அறைக்கு சென்றதாகவும், அபராதம் கட்டிவிட்டு செல்போனை எடுத்துச் செல்லுங்கள் என தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், மீண்டும் பரங்கிமலை டிக்கெட் பரிசோதகர் அறையிலேயே இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் பெண் பயணியின் தலையிலும், டிக்கெட் பரிசோதகருக்கு கை மற்றும் கழுத்திலும் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இருவரையும் சமாதானம் செய்த ரயில்வே பாதுகாப்பு போலீசார் இருவரிடமும் புகார்களை பெற்றுக்கொண்டனர். இதுதொடர்பாக இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து மாம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.