உஷார்... ஆன்லைன் முதலீட்டு மோசடி... ரூ.12 லட்சம் சுருட்டிய இளம்பெண்!
சென்னை, நொளம்பூரைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவரை, சமூக வலைத்தளத்தில் கவர்ச்சிகரமான ஆன்லைன் முதலீட்டு ஆசைகளைக் காட்டி, ரூ.12 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 3 பேரைச் சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சென்னை நொளம்பூர் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த சவுந்தரராஜன் (70) என்பவரின் முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில், பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று விளம்பரம் வந்தது. அந்த விளம்பரத்தை நம்பிய அவர், 6 தவணைகள் மூலம் ரூ.12 லட்சத்தை முதலீடு செய்து பணத்தை இழந்தார். இது மோசடி என்பதை உணர்ந்த அவர், இது குறித்து தேசிய 'சைபர் கிரைம்' இணையதளத்தில் புகார் அளித்து, பின்னர் சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், வடபழனியைச் சேர்ந்த வளவன் (49), சாலிகிராமத்தைச் சேர்ந்த பெண் சுமி (34), மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (29) ஆகிய 3 பேரையும் திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கைது செய்தனர்.
விசாரணையில், வளவன் மற்றும் சுமி ஆகியோர் 'அறப்பணி ஆன்மிக அறக்கட்டளை' என்ற பெயரில் பல வங்கிகளில் கணக்குகளைத் தொடங்கி, சைபர் மோசடி மூலம் பெறப்படும் பணத்தை வரவு வைத்து வந்துள்ளனர். மேலும், சைபர் குற்றவாளிகளுடன் கைகோர்த்து கமிஷன் பெற்றுப் பணப் பரிவர்த்தனையிலும் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இவர்கள் பயன்படுத்திய 3 தனியார் வங்கிக் கணக்குகள் மீது மட்டும் தேசிய சைபர் கிரைம் இணையதளத்தில் 138 புகார் மனுக்கள் பதிவாகி உள்ளன. மேலும் கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் மீது வேப்பேரி, விருகம்பாக்கம், அம்பத்தூர் காவல் நிலையங்களில் சுமார் 7 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!