உஷார் மக்களே... பால்கனியில் இருந்து எச்சில் துப்பியவர் மின்சாரம் தாக்கி பலி!

 

மத்திய பிரதேச மாநிலத்தில் வீட்டின் 3-வது மாடி பால்கனியில் இருந்து குட்கா எச்சில் துப்பிய முதியவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மத்திய பிரதேச மாநிலம் கன்ஜ்பசோடா பகுதியைச் சேர்ந்தவர் பிரபுலால் குப்தா (65). இவர் தனது வீட்டின் 3-வது மாடி பால்கனியில் நின்று கொண்டிருந்தபோது, குட்கா மென்றுவிட்டு வெளியே எச்சில் உமிழ்ந்துள்ளார். அப்போது, வீட்டின் மிக அருகில் உயர் அழுத்த மின்சாரத்துடன் சென்றுகொண்டிருந்த 11 KV மின்சார வயரில் எதிர்பாராத விதமாக அவரது எச்சில் பட்டுள்ளது.

மின்சார வயரில் எச்சில் பட்ட கணத்தில், திரவத்தின் வழியே மின்னோட்டம் அதிவேகமாகப் பாய்ந்து பிரபுலால் குப்தாவைத் தாக்கியது. இதில் பலத்த மின்தாக்குதலுக்கு உள்ளான அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த எதிர்பாராத மற்றும் அதிர்ச்சிகரமான விபத்து குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.