உஷார்.. போலீஸ் எனக் கூறி விடுதி அறைக்குள் நுழைந்து காதலர்களை மிரட்டி நகை, பணம் பறிப்பு!
கேரள மாநிலம் கொச்சியில் போலீஸ் என கூறி, விடுதி ஒன்றின் அறைக்குள் நுழைந்து காதல் ஜோடியிடம் அத்துமீறி பணம் மற்றும் நகைகளைப் பறித்த கும்பல் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த காதல் ஜோடியை மிரட்டி, நகை மற்றும் பணத்தைப் பறித்த புகாரில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், தனது 22 வயது காதலியுடன் கொச்சியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து கடந்த நான்கு நாட்களாகத் தங்கி இருந்துள்ளார். நேற்று இவர்களது அறைக்கதவைத் தட்டிய மூன்று பேர் கொண்ட கும்பல், ஒன்று, தங்களை 'போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு' போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்டு அதிரடியாக உள்ளே நுழைந்துள்ளனர்.
அறைக்குள் புகுந்த அந்த மர்ம நபர்கள், காதல் ஜோடியைத் தாக்கி மிரட்டியுள்ளனர். சோதனையிடுவது போல நடித்து, மேஜையில் வைக்கப்பட்டிருந்த தங்க வளையல், சுமார் 55 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள விலையுயர்ந்த செல்போன் மற்றும் கைவசமிருந்த 5 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை வலுக்கட்டாயமாகப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட இளைஞர் உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், விடுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான அடையாளங்களை வைத்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த அந்த மூன்று பேரையும் போலீசார் இன்று காலை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் போலீஸ் கிடையாது என்பதும், விடுதியில் தங்கியிருப்பவர்களைக் குறி வைத்துத் திருடும் கும்பல் என்பதும் உறுதி செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து திருடப்பட்ட நகை மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.