உஷார்.. சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை!
சமூக வலைதளங்களில் அரசு, அரசியல் பிரமுகர்கள் அல்லது தனிநபர்கள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும், கண்ணியத்தைக் குலைக்கும் வகையிலும் தவறான பதிவுகளை வெளியிடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனச் சென்னை மாநகரக் காவல்துறை மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தமிழகத்தில் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் பரஸ்பர அவதூறுகளும் போலிச் செய்திகளும் அதிகரித்து வரும் சூழலில் காவல்துறையின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகநூல், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தளங்களில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் வதந்திகளைப் பரப்புவோர் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
உடனடி வழக்குப்பதிவு: சமூக வலைத்தளக் கண்காணிப்புப் பிரிவின் மூலம் போலி கணக்குகள் மற்றும் அவதூறு பரப்புவோர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது எவ்விதப் பாகுபாடுமின்றி உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படும். ஆபாசமான பதிவுகள், சாதி மற்றும் மதக் கலவரங்களைத் தூண்டும் வகையிலான கருத்துக்கள், தனிநபர் ஒழுக்கத்தைக் குலைக்கும் விமர்சனங்களைச் பரப்புவோர் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகள் பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களைச் சட்டம் மற்றும் ஒழுங்குமுறைக்கு உட்பட்டு, மற்றவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்காத வகையில் பொதுமக்கள் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்றும், வதந்திகளை உறுதிப்படுத்தாமல் பகிர வேண்டாம் என்றும் சென்னை மாநகரக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.