உஷார்... தபால் வாக்குப்பதிவு தேதியில் மாற்றம்: ஏப்ரல் 18, 20 ஆகிய தேதிகளில் ‘வாக்கு’ செலுத்தலாம்!

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கான தபால் வாக்குப்பதிவு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, தற்போது புதிய சுற்றறிக்கையைச் சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி, சென்னையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து பாதுகாப்புப் பணிக்கு வந்துள்ள காவலர்கள் வரும் ஏப்ரல் 18 மற்றும் 20-ஆம் தேதிகளில் தங்களது தபால் வாக்குகளைப் பதிவு செய்யலாம். இந்த வாக்குப்பதிவானது அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தபால் வாக்குப்பதிவு மையங்களில் நடைபெறும்.

தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்குத் தபால் வாக்கு செலுத்துவதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 18,000 தபால் வாக்கு விண்ணப்பங்கள் காவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, பொது வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்பே இந்தத் தபால் வாக்குப்பதிவு நடைமுறைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட வேண்டும்.

வாக்குப்பதிவு நடைபெறும் தேதியான ஏப்ரல் 23-ஆம் தேதி அன்று காவலர்கள் அனைவரும் பாதுகாப்புப் பணியில் பிஸியாக இருப்பார்கள் என்பதால், அவர்கள் முன்கூட்டியே வாக்களிக்க ஏதுவாக இந்தச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காகத் தமிழகம் முழுவதும் பிரத்யேக மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தபால் வாக்கு செலுத்தும் காவலர்கள் உரிய அடையாளச் சான்றுகளுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்குச் சென்று வாக்களிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.