உஷார்... புதுச்சேரி 90 மி.லி 'சரக்கு' கொண்டு வந்தாலும் ஜெயில் தான் - போலீஸ் அதிரடி!

 

புதுச்சேரி மற்றும் கடலூர் எல்லைப் பகுதிகளில் மதுபானம் கொண்டு வருவது தொடர்பான சட்ட விதிமுறைகளில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் குறித்துக் கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர். 

பொதுவாக புதுச்சேரியில் மதுவிலை குறைவாக இருப்பதால், அங்கிருந்து மதுபானங்களைச் தமிழக எல்லைக்குள் கொண்டு வருவது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், இனிமேல் வெறும் 90 மில்லி லிட்டர் (ஒரு சிறிய பாட்டில்) மதுபானம் கொண்டு வந்தாலும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் அறிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு, ஒருவர் தனது சொந்த பயன்பாட்டிற்காக 4.5 லிட்டர் வரை மதுபானம் வைத்திருக்கலாம் அல்லது கொண்டு வரலாம் என்ற அரசாணை நடைமுறையில் இருந்தது. கடந்த 2025-ம் ஆண்டு இந்த அரசாணையில் மிக முக்கியத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இதன்படி அண்டை மாநிலங்களிலிருந்து மதுபானங்களைக் கொண்டு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஒரு வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போதைய சூழலில் மிகக் குறைந்த அளவு மதுபானம் கொண்டு வருவதும் குற்றமாகவே கருதப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை (மே 4) நெருங்கி வருவதாலும், கோடை விடுமுறை காலம் என்பதாலும் புதுச்சேரி-தமிழக எல்லைகளான கடலூர், விழுப்புரம் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் வாகனச் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

எனவே, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் புதுச்சேரியிலிருந்து மதுபானங்களை வாங்கி வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மீறுபவர்கள் மீது சட்டப்படி கைது நடவடிக்கை மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.