உஷார்... சென்னையைச் சீரழித்தால் கடும் நடவடிக்கை... சுவரொட்டி ஒட்டியவர்களுக்கு ரூ.2.45 லட்சம் அபராதம்!

 

பெருநகர சென்னை மாநகரப் பகுதிகளை எப்போதும் தூய்மையாகவும், பார்ப்போர் வியக்கும் வண்ணம் அழகுடனும் பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளைத் தங்கு தடையின்றி மேற்கொண்டு வருகிறது. இதன் முக்கியப் பகுதியாக, சென்னை நகரின் அழகைக் குலைக்கும் வகையில் மேம்பாலத் தூண்கள், சாலையோரச் சுவர்கள், அரசு மற்றும் மாநகராட்சி கட்டடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கண்டமேனிக்குச் சுவரொட்டிகள் (போஸ்டர்கள்) ஒட்டுவதற்குக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை முற்றிலும் மீறிச் சுவரொட்டி ஒட்டுபவர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் மூலமாகத் தற்போது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலப் பகுதிகளில் கடந்த மே 12-ம் தேதி முதல் ஜூன் 9-ம் தேதி வரையிலான ஒரு மாத காலக் கட்டத்திற்குள், அரசு மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி ஒட்டப்பட்டிருந்த மொத்தம் 4,491 அநாகரிகச் சுவரொட்டிகள் மாநகராட்சி ஊழியர்களால் கிழித்து அகற்றப்பட்டுள்ளன. மேலும், இந்தச் சட்டவிரோதச் செயலில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.2,45,000/- (2.45 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டு  நடவடிக்கை பாய்ந்துள்ளது.

இந்த நடவடிக்கையில் சென்னை மாநகராட்சியின் பல்வேறு மண்டலங்களில் தனித்தனியாகப் போஸ்டர்கள் அகற்றப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தேனாம்பேட்டை மண்டலத்தில் 235 சுவரொட்டிகள் அகற்றப்பட்டு அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாயும், அடையாறு மண்டலத்தில் 176 சுவரொட்டிகள் அகற்றப்பட்டு 70 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கோடம்பாக்கத்தில் 101 போஸ்டர்களுக்கு 95 ஆயிரம் ரூபாயும், சோழிங்கநல்லூரில் 242 போஸ்டர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், மணலியில் 35 போஸ்டர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவொற்றியூரில் 394 போஸ்டர்கள் மற்றும் திரு.வி.க.நகரில் 400 போஸ்டர்கள் அகற்றப்பட்டு தலா 15 ஆயிரம் ரூபாயும், ஆலந்தூரில் 108 போஸ்டர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் அபராதம் போடப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் மற்ற பகுதிகளான மாதவரத்தில் 276 போஸ்டர்கள் மற்றும் பெருங்குடியில் 130 போஸ்டர்கள் அகற்றப்பட்டு தலா 10 ஆயிரம் ரூபாயும், இராயபுரத்தில் 106 போஸ்டர்கள் மற்றும் அண்ணாநகரில் 446 போஸ்டர்கள் அகற்றப்பட்டுத் தலா 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தண்டையார்பேட்டையில் 32 போஸ்டர்கள், அம்பத்தூரில் 239 போஸ்டர்கள் மற்றும் வளசரவாக்கத்தில் 336 போஸ்டர்கள் அகற்றப்பட்டு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் கண்டபடி சுவரொட்டிகள் ஒட்டுவது மற்றும் சுவர்களில் விளம்பரங்கள் வரைவது போன்ற அநாகரிகச் செயல்களை முற்றிலுமாகத் தவிர்த்து, சென்னையைத் தூய்மையாகப் பராமரிக்க மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையையும் மீறிச் சுவர்களில் விளம்பரம் செய்யும் நபர்கள் மீது இனிவரும் நாட்களிலும் கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன் எச்சரித்துள்ளார்.