உஷார்.. இனி பாசி பிடித்த கேன்களில் தண்ணீர் விற்றால் ரூ.5,000 அபராதம் - தமிழக அரசு உத்தரவு!

 

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தாகத்தைத் தணிக்க அதிகளவில் கேன் குடிநீரைச் சார்ந்துள்ளனர். மக்களின் இந்தத் தேவையைப் பயன்படுத்தி, தரம் குறைந்த குடிநீரை விற்பனை செய்பவர்களுக்குக் கடிவாளம் போடும் வகையில், தமிழக உணவு பாதுகாப்புத் துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 20 லிட்டர் குடிநீர் கேன்களின் தரம் மற்றும் பாதுகாப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்பட்டு அசுத்தமான நிலையிலோ அல்லது உள்புறம் பாசி பிடித்த நிலையிலோ இருக்கும் கேன்களில் குடிநீர் விநியோகம் செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு உடனடி அபராதமாக ரூ.5,000 விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இனி விற்பனைக்கு வரும் ஒவ்வொரு குடிநீர் கேனிலும் சில அத்தியாவசியத் தகவல்கள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, குடிநீர் நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் மிக முக்கியமாக FSSAI எனப்படும் உணவு பாதுகாப்புத் துறையின் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் எண் ஆகியவை தெளிவாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும். இந்த விபரங்கள் இல்லாத கேன்களை விநியோகிக்கும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

குடிநீர் விநியோகஸ்தர்கள் பல நேரங்களில் கேன்களை லாரிகளிலோ அல்லது கடைகளின் முன்போ நேரடியாகச் சூரிய ஒளி படும்படி அடுக்கி வைக்கின்றனர். இவ்வாறு செய்வதால் பிளாஸ்டிக் கேன்களில் உள்ள வேதிப்பொருட்கள் குடிநீரில் கலந்து உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, கேன் குடிநீரை எக்காரணம் கொண்டும் நேரடியாகச் சூரிய ஒளி படும்படி தேக்கி வைக்கக் கூடாது என்று நிறுவனங்களுக்குக் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் கேன்களின் பயன்பாடு குறித்துப் புதிய விதியையும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அதன்படி, ஒரு பிளாஸ்டிக் கேனை அதிகபட்சமாக 30 முறைக்கு மேல் மீண்டும் பயன்படுத்தி குடிநீர் நிரப்பக் கூடாது. மேலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் மனித உடலுக்குத் தேவையான கால்சியம் (10 முதல் 75 மி.கி/லிட்டர்) மற்றும் மெக்னீசியம் (5 முதல் 30 மி.கி/லிட்டர்) ஆகிய தாதுக்கள் சரியான அளவில் இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளைச் சரியாகப் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்கச் சென்னை மாநகராட்சி, உணவு பாதுகாப்புத் துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகியவை இணைந்து ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளன. இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் உள்ள குடிநீர் ஆலைகள் மற்றும் விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்வார்கள். முறையான அனுமதி மற்றும் ஐஎஸ்ஐ (ISI) தரச் சான்றிதழ் இன்றிச் செயல்படும் ஆலைகளுக்கு உடனடியாக சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் குடிநீர் தரம் குறைந்தால் காலரா, டைபாய்டு போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால், பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.