உஷார்... செல்போனுக்குச் சார்ஜ் போட முயன்ற இளம்பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!
காஞ்சிபுரம் மாவட்டம், நகரப் பகுதியில் நேற்று மாலை, புஷ்பா என்ற இளம்பெண், தனது செல்போனுக்கு வழக்கம் போல் சார்ஜ் போடுவதற்காக முயன்ற போது, சுவிட்ச் போர்டில் ஏற்கனவே ஏற்பட்டிருந்த மின்கசிவு காரணமாக, புஷ்பா மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் புஷ்பா அங்கிருந்த சுவற்றில் பலமாகத் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உடல் கருகி, துடிதுடித்து உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர், புஷ்பா சடலமாக கிடப்பதைக் கண்டு நிலைகுலைந்து கதறி அழுதனர்.
இத்துயரச் சம்பவம் குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் நகரப் போலீசார், புஷ்பாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செல்போனுக்குச் சார்ஜ் போட முயன்ற பெண் மின்சாரம் பாய்ந்து பலியான இந்த சம்பவம் காஞ்சிபுரம் மக்களிடையே துயரத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.