உஷார்.. புலிகள் நடமாட்டம்... சுற்றுலாப் பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை... வனத்துறை தடை அறிவிப்பு!

 

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் அமைந்துள்ள டாப்சிலிப் பகுதிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அங்குள்ள அம்புலி தங்கும் விடுதிக்கு மிக அருகில் புலி ஒன்று ஒய்யாரமாக சாலையைக் கடந்து சென்றது அங்கிருந்தவர்களை உறைய வைத்துள்ளது.

இதனை அந்த வழியாகச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர் தனது செல்பேசியில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட அது தற்போது காட்டுத்தீயாக பரவி வருகிறது. குடியிருப்புகள் மற்றும் தங்கும் விடுதிகள் நிறைந்த பகுதியில் புலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது.

வனத்துறையினர் உடனடியாக அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று புலியின் நடமாட்டத்தை தீவிரமாக ஆய்வு செய்து கண்காணிப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் மாலை 5 மணிக்கு மேல் தங்கும் விடுதியை விட்டு வெளியே வரக்கூடாது என்று வனத்துறை சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இரவு நேரங்களில் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியை ஒட்டிய சாலைகளில் நடமாடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வனத்துறையின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். புலி நடமாடும் பகுதிகளில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தொடர் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அடர்ந்த வனப்பகுதி என்பதால் விலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க அகழிகள் மற்றும் வேலிகளை சீரமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறை என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும் சூழலில் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு வனத்துறை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.