உஷார்... ‘இப்படியெல்லாமா திருடுவாங்க...” நகை வாங்குவது போல் நகைக்கடையில் திருட்டு... 2 பேர் கைது!

 

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பஜார் பகுதியில் உள்ள நகைக்கடையில், வாடிக்கையாளர்கள் போல் வந்து ஒரு சவரன் தங்கக் கம்மலைத் திருடியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கேசவன் (55), பாண்டீஸ்வரி (50) ஆகிய இருவரும் நகை வாங்குவது போல் படப்பை பஜாரில் உள்ள கடைக்குச் சென்றுள்ளனர். அங்கு கடைக்காரரிடம் பல்வேறு நகைகளைக் காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். அவர் நகைகளை எடுத்துக் காண்பித்தபோது, இருவரும் அவரது கவனத்தைத் திசைதிருப்பியதாகக் கூறப்படுகிறது. அந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு சவரன் தங்கக் கம்மலை கேசவன் தனது லுங்கியில் மறைத்து வைத்துள்ளார்.

நகைகளைச் சரிபார்த்த கடைக்காரர் கம்மல் காணாமல் போனதை அறிந்து இருவரிடமும் கேட்டுள்ளார். அவர்கள் மறுத்ததால், கடை உரிமையாளர் தாராசந்த் படப்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் திருட்டு நடந்தது தெரியவந்தது. இதையடுத்து கேசவன் கம்மலை ஒப்படைத்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் கோயம்பேடு பகுதியில் தங்கி இருந்தது தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.