உஷார்.. இன்று தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நீடித்து வரும் வேளையில், வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை வானிலை மையம் இன்று காலை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டப் போகிறது.
இந்த மாவட்டங்களில் மழையின் போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல் நாளை திங்கட்கிழமையும் (ஜூன் 08) தமிழகத்தின் பல பகுதிகளில் மழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மறுபுறம், தமிழகக் கடலோர மாவட்டங்களில் இன்று வழக்கத்தை விட அதிக வெப்பநிலையும், காற்றில் அதிக ஈரப்பதமும் காணப்பட வாய்ப்புள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களுக்குக் கடுமையான உஷ்ணமும், புழுக்கமும் ஏற்படலாம் என்பதால், போதிய அளவு தண்ணீர் குடித்து உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.