உஷார்... கே.எப்.சி (KFC) பர்கரில் நெளிந்த புழுக்கள்.. அலறிய வாடிக்கையாளர்!

 

கோவையில் உள்ள பிரபல கே.எப்.சி (KFC) உணவகத்தில் வாங்கப்பட்ட பர்கர் ஒன்றில் புழுக்கள் நெளிந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, அசைவ உணவுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை அவினாசி சாலையில் சர்வதேசத் தரம் வாய்ந்ததாகக் கருதப்படும் பிரபல கே.எப்.சி உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று வந்த வாடிக்கையாளர் ஒருவர், தனக்கு மிகவும் பிடித்தமான பர்கர் ஒன்றை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.

ஆவலோடு அந்த பர்கரை சாப்பிட முயன்றபோது, அதற்குள் சிறிய புழுக்கள் உயிருடன் நெளிந்து கொண்டிருப்பதைக் கண்டு அவர் நிலை குலைந்து போனார். பர்கரின் தரம் மிகவும் மோசமாக இருந்ததோடு, அதில் புழுக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அதனைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தார்.

இது குறித்து அங்கிருந்த கே.எப்.சி உணவக மேலாளர் மற்றும் நிர்வாகத்தினரிடம் அந்த வாடிக்கையாளர் உடனடியாக நேரில் சென்று நியாயம் கேட்டுள்ளார். ஆனால் உணவக ஊழியர்கள், வாடிக்கையாளரின் புகாருக்கு முறையான எவ்வித விளக்கமும் அளிக்காமல், மிகவும் அலட்சியமாகவும், பொறுப்பற்ற முறையிலும் பதிலளித்ததாகப் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பர்கரில் புழுக்கள் நெளியும் அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள்  சமூக வலைத்தளங்களான எக்ஸ்  மற்றும் பேஸ்புக்கில் தீயாய் பரவி வருகிறது. "இவ்வளவு பெரிய சர்வதேச நிறுவனங்களிலேயே உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்தால், சாமானிய மக்கள் எங்குச் சென்று சாப்பிடுவது?" என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் இதுகுறித்து கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் முறைப்படி புகார் அளிக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட கே.எப்.சி உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.