undefined

“ஐயா நல்லகண்ணுவுக்கு பாரத ரத்னா” - எல்.முருகன் உறுதி!

 

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், இது குறித்து மத்திய இணையமைச்சர் எல். முருகன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் காலமான நல்லகண்ணு அவர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல். முருகன், அந்த மாபெரும் தலைவரின் எளிமையைப் போற்றிப் பேசினார். நல்லகண்ணு அவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காகவும், அடித்தட்டு மக்களின் நலனுக்காகவும் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்த ஒரு மகான் என்று அவர் புகழ்ந்தார். 

இன்றைய இளைஞர்களுக்கு அரசியலில் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அவர் வாழ்ந்து காட்டியுள்ளார். மிக உயர்ந்த அரசியல் அந்தஸ்தில் இருந்தபோதிலும், இன்று வரை சொந்த வீடுகூட இல்லாமல் வாழ்ந்த ஒரு அரிய தலைவர் அவர். நல்லகண்ணு அவர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி, அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைத் தான் மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அதற்கான பரிந்துரையைச் செய்வேன் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

நல்லகண்ணு அவர்களின் மறைவு தமிழக அரசியலுக்குப் பேரிழப்பு என்றும், அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சித் தொண்டர்களின் துயரத்தில் தானும் பங்கெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.