“வாகனங்கள் பழுதாகும்” - இந்தியாவிடம் பெட்ரோல் வாங்க பூடான் மறுப்பு!
சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் முழு வீச்சில் புழக்கத்திற்கு வந்துள்ள 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்ட 'இ20' பெட்ரோலைத் தங்களுக்கு விநியோகம் செய்ய முன்வந்த இந்திய எண்ணெய் நிறுவனங்களின் சலுகையைப் பூடான் அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இந்த எத்தனால் கலப்பு பெட்ரோலால் தங்களது நாட்டு வாகனங்களின் எஞ்சின்கள் முழுமையாகப் பாழாகும் எனப் பூடான் வர்த்தகத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து இ20 பெட்ரோலை இறக்குமதி செய்யும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று தெரிவித்துள்ள பூடான் அரசு மற்றும் அந்நாட்டின் மிகப்பெரிய எரிபொருள் விநியோக நிறுவனமான 'தாஷி பி.ஓ.டி' ஆகியவை தொழில்நுட்பக் காரணங்களைப் பட்டியலிட்டுள்ளன.
சாதாரண பெட்ரோலை விட எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும், தண்ணீரையும் மிக எளிதாகத் தன்பால் உறிஞ்சும் தன்மை கொண்டது. பூடான் ஒரு மலைப்பிரதேசம் என்பதால் அங்கு நிலவும் தட்பவெப்ப நிலைக்கு இது உகந்தது அல்ல என அந்நாட்டு நிபுணர்கள் கருதுகின்றனர்.
பூடானில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகளின் நிலத்தடி சேமிப்புத் தொட்டிகள் மிகவும் பழமையானவை. மலைப்பாங்கான பகுதி என்பதால் நிலத்தடி நீர் இந்தத் தொட்டிகளுக்குள் கசிந்து வர அதிக வாய்ப்புகள் உள்ளன.
சேமிப்புத் தொட்டிகளில் சிறிதளவு தண்ணீர் கசிவு ஏற்பட்டாலும், இ20 பெட்ரோலில் உள்ள எத்தனால் அந்தத் தண்ணீரை உறிஞ்சி, வேதியியல் மாற்றம் அடைந்து எரிபொருளைப் பால் போன்ற நிறத்திற்கு மாற்றிவிடும். இந்தத் தரமற்ற எரிபொருளைப் பயன்படுத்தினால் வாகனங்களின் எஞ்சின்கள் முற்றிலும் பழுதடைந்து, வண்டிகள் பாதியிலேயே நின்றுவிடும் அபாயம் உள்ளது.
மலைப்பாங்கான சாலைகளில் வாகனங்களை இயக்குவதற்கு எஞ்சின்களுக்கு அதிகப்படியான சக்தி தேவைப்படுகிறது. ஆனால், எத்தனால் கலந்த பெட்ரோல் போதிய மைலேஜ் மற்றும் தேவையான எனர்ஜியை வாகனங்களுக்குத் தராது என்பதால், பூடான் நாட்டின் கரடுமுரடான மலைப்பாதைகளுக்கு இது துளியும் சரிவராது என்று பூடான் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தவும் பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் இலக்கை இந்திய அரசு அண்மையில் எட்டியுள்ளது. உள்நாட்டுப் பயன்பாடு போக அண்டை நாடான பூடானுக்கும் இதனை ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டிருந்த வேளையில், பூடானின் இந்தத் திடீர் மறுப்பு இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்குச் சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.