BIG BREAKING: சிக்கிம் சுரங்கப்பாதையில் மீத்தேன் வாயு கசிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு; 18 பேர் உள்ளே சிக்கித் தவிப்பு!
சிக்கிம் மாநிலம் நாம்ச்சி மாவட்டத்தில் உள்ள நீர்மின் திட்டச் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்து மற்றும் நிலச்சரிவு காரணமாக 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளதால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நாம்ச்சி மாவட்டம் சாமர்துங் பகுதியில் 'படேல் இன்ஜினியரிங்' நிறுவனம் 'டீஸ்டா கட்டம்-VI' நீர்மின் திட்டத்திற்கான சுரங்கப்பாதையை அமைத்து வந்தது. சுரங்கத்தின் உட்பகுதியில் திடீரென ஏற்பட்ட மீத்தேன் வாயு கசிவு மற்றும் வெடிவிபத்து காரணமாகப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு, சுரங்கத்தின் பிரதான நுழைவு வாயில் முற்றிலும் அடைபட்டது.
விபத்து நடந்த நேரத்தில் சுரங்கத்திற்குள் இருந்த 27 தொழிலாளர்களில், 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீதமுள்ள 18 தொழிலாளர்கள் இன்னும் மீட்புக்காகத் தவித்து வருகின்றனர். தகவல் அறிந்து தேசியப் பேரிடர் மீட்புப் படை, மாநிலப் பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.
சுரங்கத்தின் உள்ளிருந்து தொடர்ச்சியாக ஆபத்தான மீத்தேன் வாயு கசிவதால் ஆக்சிஜன் அளவு கடுமையாகக் குறைந்துள்ளது. உள்ளே செல்ல முயன்ற மீட்புப் படை வீரர்கள் சிலருக்கே தலைச்சுற்றல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பணிகள் மிகவும் எச்சரிக்கையுடன் மெதுவாக நடைபெற்று வருகின்றன.
இதுவரை மீட்கப்பட்ட 7 தொழிலாளர்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காகச் சிங்க்டாம், நம்சி மற்றும் கேங்டாக் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உள்ளே சிக்கியுள்ள 18 தொழிலாளர்களைப் பாதுகாப்பாக மீட்க, அதிநவீன சுவாசக் கருவிகளுடன் மீட்புக் குழுவினர் தொடர்ந்து போராட்டக் களத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.