BIG NEWS: இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி 'கியூடெங்கா'-விற்கு டிசிஜிஐ ஒப்புதல்!

 

ஆண்டுதோறும் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வரும் இந்தியாவில், நோய்த் தடுப்பு நடவடிக்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக நாட்டின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்துள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த முன்னணி பார்மா நிறுவனமான தகேடா தயாரித்துள்ள 'கியூடெங்கா' (QDENGA / TAK-003) என்ற தடுப்பூசிக்கு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் சந்தை அனுமதி வழங்கி அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தடுப்பூசி 4 வயது முதல் 60 வயது வரை உள்ள சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்குச் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பூசியைச் செலுத்துவதற்கு முன் டெங்கு இரத்தப் பரிசோதனை செய்யத் தேவையில்லை. ஒருவருக்கு இதற்கு முன் டெங்கு காய்ச்சல் வந்திருந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, இந்தத் தடுப்பூசியைப் பாதுகாப்பாகப் போட்டுக்கொள்ளலாம். டெங்கு வைரஸில் உள்ள நான்கு முக்கியமான மாற்று வகைகளுக்கும் எதிராக இது விரிவான நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்குகிறது. தோல் அடியில் 0.5 மில்லி லிட்டர் அளவில், 3 மாத இடைவெளியில் 2 டோஸ்களாக இந்த மருந்து செலுத்தப்படும். தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறனில் சர்வதேசத் தரத்திற்கு இணையாக உள்ளதால், உலக சுகாதார அமைப்பும் இதன் பயன்பாட்டைப் பரிந்துரை செய்துள்ளதுடன் சான்றிதழும் அளித்துள்ளது.

ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 43-க்கும் மேற்பட்ட நாடுகளில் இது ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு, இதுவரை 3.2 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் உலகளவில் செலுத்தப்பட்டுள்ளன. பிரேசில், அர்ஜென்டினா, கொலம்பியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் தேசியத் தடுப்பூசி திட்டங்களிலும் இது இடம்பெற்றுள்ளது.

19 கட்டங்களாக 28,000-க்கும் மேற்பட்ட சர்வதேசப் பங்கேற்பாளர்களிடம் நடத்தப்பட்ட சோதனைகள் மற்றும் இந்தியாவில் 4 முதல் 60 வயதுடையவர்களிடம் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகளின் தரவுகளின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பயாலஜிகல் ஈ நிறுவனத்துடனான கூட்டாண்மை மூலம் உள்ளூரிலேயே கோடிக்கணக்கில் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு, விரைவில் வணிகரீதியாக மக்களுக்குக் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.