பிக்பாஸ் பிரபலம் 'வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர் கைது - சிறையில் அடைப்பு!

 

சமூக வலைத்தளங்களில் 'வாட்டர் மெலன் ஸ்டார்' என்று பரவலாக அறியப்படும் பிக்பாஸ் பிரபலம் திவாகர், பணப் பறிப்பு வழக்கில் சென்னை கீழ்ப்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவரைத் திவாகர் அண்மையில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, அந்த ஊழியரைத் தேவையில்லாமல் மிரட்டியதுடன், அவரிடமிருந்து ரூபாய் 1 லட்சம் பணத்தைப் பறிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. பணம் தர மறுத்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனத் திவாகர் மிரட்டல் விடுத்ததால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் ஊழியர், உடனடியாகக் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் இது குறித்து முறைப்படி புகார் அளித்தார்.

பாதிக்கப்பட்ட ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில், கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் திவாகர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். அவர் மீது மிரட்டல் விடுத்தல் மற்றும் பணப் பறிப்பு முயற்சி உள்ளிட்ட இரண்டு முக்கியப் பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை திவாகரை  கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமூக வலைத்தள வீடியோக்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு யூடியூபர், பணப் பறிப்பு வழக்கில் சிக்கிச் சிறைக்குச் சென்றிருப்பது இணையவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.