பெண் குழந்தைக்குத் தாயானார் ‘பிகில்’ பட நடிகை... மகளின் புகைப்படம் வெளியிட்டு பெயர் அறிவிப்பு!
‘பிகில்’, ‘எஃப்.ஐ.ஆர்’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்துத் தமிழ் ரசிகர்களின் அன்பைப் பெற்ற பிரபல நடிகை ரெபா மோனிகா ஜான், தனக்குப் பெண் குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான செய்தியைச் சமூக வலைத்தளப் பதிவு மூலம் பகிர்ந்துள்ளார்.
தனது புதிதாகப் பிறந்த மகளின் முதல் புகைப்படம் மற்றும் கணவருடன் இருக்கும் குடும்பப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள ரெபா, தனது மகளுக்குச் சூட்டியுள்ள பெயரையும் அறிவித்துள்ளார்: கடந்த ஜூலை 22-ம் தேதி பிறந்த தனது பெண் குழந்தைக்குக் ‘கியாரா ஜோசப்’ எனப் பெயரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
"ஹலோ உலகமே... கடந்த சில நாட்கள் எங்கள் 'குட்டி தேவதையுடன்' புதிய வாழ்க்கையை மெதுவாக அரவணைத்து வாழ்ந்த அன்பான தருணங்களாக அமைந்துள்ளன" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒன்பது மாதங்கள் தனது வாழ்க்கையில் ஒரு அதிசயமான காலமாக இருந்ததாகவும், தனது உடலுக்குள் இன்னொரு உயிர் வளர்ந்ததை நினைக்கும் போது ஆச்சரியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இனி கணவர் மற்றும் மகளுடன் இணைந்து மூவராகப் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைவதாகவும், கியாராவுக்கு இந்த உலகை அறிமுகப்படுத்தி அழகான நினைவுகளை உருவாக்க ஆவலாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மலையாளத் திரைப்படங்கள் மூலம் அறிமுகமாகி ‘பிகில்’ படத்தின் மூலம் தமிழிலும் கவனம் ஈர்த்த ரெபா மோனிகா ஜான், திருமணத்திற்குப் பிறகும் ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார். தற்போது அவர் பகிர்ந்துள்ள குடும்பப் புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் குட்டி கியாராவுக்குத் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.