பீகாரில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி; கலெக்டரின் சட்டைக் காலரைப் பிடித்த பெண்கள்... அதிர்ச்சி வீடியோ!

 

 

 

பீகார் மாநிலம் மதுபனி மாவட்டத்தில் போலீஸ் உதவி ஆய்வாளர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின்போது, மாவட்ட கலெக்டரின் சட்டைக் காலரைப் பெண்கள் பிடித்து இழுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுபனி மாவட்டம் பாபுபர்ஹி காவல் எல்லைக்குட்பட்ட பலிராஜ்கர் கிராமத்தில், செவ்வாய்க்கிழமை அதிகாலை காவல் உதவி ஆய்வாளர் சந்திரமோகன் சிங் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அசோக் யாதவ் (50) உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், உயிரிழந்தவரின் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதையடுத்து, மாவட்ட கலெக்டர் ஆனந்த் சர்மா மற்றும் காவல் கண்காணிப்பாளர் யோகேந்திர குமார் ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றனர். அப்போது ஆத்திரமடைந்த பெண்கள் சிலர் கலெக்டரின் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். ஒரு பெண் காலணியால் தாக்கவும் முயன்றதாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்புப் படையினர் தலையிட்டு கலெக்டரைப் பாதுகாப்பாக மீட்டனர். இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.