பட்டப்பகலில் மைனர் சிறுமியிடம் அத்துமீறல்! வீடியோ வைரல்.. 

 

 

பீகாரில் சிறுமியிடம் இளைஞர்கள் அத்துமீறியதாக கூறப்படும் மற்றொரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சமஸ்திபூர் மாவட்டம் கர்பூரிகிராம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜகத்சிங்பூர் கிராமம் அருகே இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

அங்குள்ள சாலை பகுதியில் சிறுமியை சில இளைஞர்கள் சூழ்ந்து கொண்டு தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடியோ காட்சிகள் போலீசாரின் கவனத்துக்கு சென்றதை தொடர்ந்து, சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டது. தொடர்ந்து சிறுமியிடம் அத்துமீறியதாக கூறப்படும் 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களின் பங்கு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

பீகாரின் ஜமுய் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி மற்றும் அவரது நண்பரான சிறுவனை ஒரு கும்பல் வழிமறித்து தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படும் சம்பவத்தின் வீடியோ பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தில் போலீசார் நடவடிக்கை எடுத்த நிலையில், தற்போது சமஸ்திபூரில் மீண்டும் இதுபோன்ற சம்பவம் வெளியாகியுள்ளது.

 

இதுபோன்ற சம்பவங்களின் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்வது சிறுமியின் அடையாளம் வெளிப்படுவதற்கு வழிவகுக்கும் என்பதால், பாதிக்கப்பட்ட சிறுமியின் முகம் உள்ளிட்ட அடையாள விவரங்களை வெளியிடாமல் இருப்பது அவசியம். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.