தண்டவாளத்தைக் கடந்தபோது நேர்ந்த பயங்கரம்... எக்ஸ்பிரஸ் ரயில் மோதி மாமியார், மருமகள் பலி!
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சேர்ந்த மாமியார் மற்றும் மருமகள், ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 62 வயதான இந்தர் தேவி, தனது 45 வயது மருமகள் சங்கீதா தேவியை ரயில் நிலையத்தில் வழியனுப்பி வைப்பதற்காகப் பக்தியார்பூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது நடை மேம்பாலத்தைப் பயன்படுத்தாமல் தண்டவாளத்தின் வழியாகச் செல்ல முயன்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
அவர்கள் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, டெல்லியிலிருந்து மால்டா டவுன் நோக்கி அதிவேகமாக வந்த 'பராக்கா எக்ஸ்பிரஸ்' ரயில் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சிக்கிய மாமியார் மற்றும் மருமகள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களுடன் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற ஒரு மர்ம நபர், கடைசி நொடியில் பிளாட்பாரத்தில் ஏறி உயிர் தப்பிய காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
விபத்து குறித்துத் தகவல் அறிந்த ரயில்வே போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஒரு சிறிய கவனக்குறைவால் நேரிட்ட இந்த விபத்து, ரயில் பயணிகள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்டவாளங்களைக் கடக்கும்போது பொதுமக்கள் எப்போதும் நடை மேம்பாலங்களையே பயன்படுத்த வேண்டும் என ரயில்வே அதிகாரிகள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.