நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் திடீர் தீ விபத்து... பீகாரில் பரபரப்பு!
பீகார் மாநிலம் ரோஸ்தாஸ் மாவட்டத்தில் உள்ள சசாரம் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை 5:30 மணி அளவில் எவரும் சற்றும் எதிர்பாராத ஒரு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சசாரம் ரயில் நிலையத்தின் 6-வது நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த சசாரம்–பாட்னா பயணிகள் ரயிலின் ஒரு பெட்டியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறி தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால் அங்கு இருந்த பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் மத்தியில் பெரும் பதற்றமும் சலசலப்பும் ஏற்பட்டது.
ரயில் பெட்டி தீப்பற்றி எரிவது குறித்து அங்கிருந்தவர்கள் உடனடியாக ரயில்வே உயர் அதிகாரிகளுக்கும் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கும் அவசரத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் ரயில்வே மீட்புக் குழுவினர், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக அந்தச் சமயத்தில் ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் மாபெரும் உயிர்ச்சேதம் தவி்க்கப்பட்டது.
மின்கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ரயில்வே அதிகாரிகள் தங்களது முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் ரயிலின் ஒரு பெட்டி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்தியப் பிரதேசத்தில் ராஜதானி விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டிருந்த நிலையில், தற்பொழுது பீகாரில் நடந்துள்ள இந்த இரண்டாவது ரயில் தீ விபத்துச் சம்பவம் இணையதளப் பக்கங்களில் வெளியாகிப் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.