மன்னிச்சிடுங்க அப்பா... 50 முறை முயற்சி பண்ணியும் அரசு வேலை கிடைக்கல... ஆளுநரிடம் தங்கப் பதக்கம் பெற்ற இளைஞர் கடிதம் எழுதி தற்கொலை!
மாநில ஆளுநரிடம் தங்கப் பதக்கம் பெற்றுத் தனது கல்வித் திறமையை நிருபித்த இளைஞர் ஒருவர், பல ஆண்டுகள் முயன்றும் அரசு வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கல்விப் படிப்பில் சிறந்து விளங்கி, உயரிய விருதைப் பெற்ற ஒரு இளைஞருக்கு நேர்ந்த இந்த விபரீத முடிவு, அரசுத் தேர்வுக்குப் படிக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களிடையே பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான ஆனந்த் குமார் என்ற வாலிபர், உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கடந்த 2024-ஆம் ஆண்டு பி.டெக் படிப்பில் மாநில அளவில் 3-வது இடம் பிடித்துத் தேர்ச்சி பெற்ற இவருக்கு, அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் தங்கப் பதக்கம் வழங்கிப் பாராட்டியிருந்தார். தனது படிப்பை முடித்த பிறகு, அரசுத் துறையில் நல்ல அதிகாரியாகப் பணியாற்ற வேண்டும் என்ற லட்சியத்தோடு பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துத் தயாராகி வந்துள்ளார்.
தனது அரசு வேலை கனவை நனவாக்குவதற்காக, அவர் சற்றும் தளராமல் இரயில்வே, வங்கி உட்பட 50-க்கும் மேற்பட்ட பல்வேறு அரசுப் பணித் தேர்வுகளை எழுதி வந்துள்ளார். இரவும் பகலும் கடுமையாக உழைத்துத் தேர்வுகளை எழுதியபோதிலும், அத்தனை முயற்சிகளிலும் அவருக்குத் தோல்வியே பதிலாகக் கிடைத்துள்ளது. இத்தனை போராட்டங்களுக்குப் பிறகும் ஒரு அரசு வேலையைக் கூட பெற முடியவில்லையே என்ற ஏமாற்றமும், தனது எதிர்காலம் குறித்தான பயமும் நாளடைவில் அவரைத் தீவிர மன உளைச்சலுக்கு தள்ளியுள்ளது.தொடர்ச்சியான தோல்விகளால் ஏற்பட்ட கடுமையான விரக்தியின் எல்லைக்கே சென்ற ஆனந்த் குமார், தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். “மன்னித்துவிடுங்கள் அப்பா, 50 முறை முயன்றும் அரசு வேலை கிடைக்கவில்லை” என அவர் எழுதி வைத்த சோகக் கடிதத்தைக் கைப்பற்றிய கோவிந்த நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.