நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு... பீகார் மாநிலத்திற்கு ஹை அலெர்ட்...!

 

 

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நூற்றுக்கணக்கானோர் இந்த திடீர் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளம் காரணமாகக் கண்டக் ஆற்றின் நீர்மட்டம் அபாயக் கட்டத்தைத் தாண்டி அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கு உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேபாளம் கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தை அடுத்து பீகார் மற்றும் உத்திரபிரதேச மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக நேபாளத்தில் பல வீடுகள், வாகனங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் அவசர கால நடவடிக்கைகளை மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆற்றுப்பகுதிகளில் வசிப்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.