காதலனைத் திருமணம் செய்யக்கோரி மொபைல் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த  இளம்பெண் ... பரபரப்பு வீடியோ!

 

 

பீகார் மாநிலம் ரக்சால் பகுதியில், காதலனைத் திருமணம் செய்து வைக்கக் கோரி 19 வயது இளம்பெண் ஒருவர் மொபைல் கோபுரத்தில் ஏறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கையில் கூர்மையான கத்தியுடன் கோபுரத்தின் உச்சிக்குச் சென்ற அவர், தனது கோரிக்கையை உடனடியாக ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தகவல் அறிந்ததும் பொதுமக்களும் காவல்துறினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்குத் திரண்டனர். நீண்ட நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அந்த இளம்பெண் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

ரக்சால் பகுதியில் உள்ள உயரமான மொபைல் கோபுரத்தின் மீது ஏறிய அந்த இளம்பெண், காதலனைத் திருமணம் செய்து கொள்ளக் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். கையில் கத்தி இருந்ததால் அப்பகுதியில் நிலைமை மேலும் பதற்றமான நிலையில், போலீசார் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கீழே இறங்கி வருமாறு பலமுறை அறிவுறுத்தியதுடன், எந்தவித ஆபத்தான முடிவையும் எடுக்க வேண்டாம் என்றும் அவரைச் சமாதானப்படுத்தியுள்ளனர்.

நீண்ட நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கோபுரத்திலிருந்து கீழே இறங்க முயன்றபோது அவர் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழும் நிலைக்குச் சென்றுள்ளார். அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர் தப்பிய அவரைப் போலீசார் உடனடியாகப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட இளம்பெண்ணிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், காதல் விவகாரம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.