பெற்றோர்களே உஷார்... கிருஷ்ணர் வேடமிட்ட 5 வயது சிறுவன் உயிரிழப்பு... முத்து மணி தொண்டையில் சிக்கியதால் விபரீதம் !
பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டம் கூச்செஸ் வட்டாரத்திற்குட்பட்ட பகீரத் கிராமத்தில் கிருஷ்ணர் வேடமணிந்து விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் ஆர்யன், தான் கழுத்தில் அணிந்திருந்த முத்து மாலையின் மணியைப் பற்களால் கடித்து இழுத்தபோது மாலை அடியோடு அறுந்துள்ளது. அதன் ஒரு மணி எதிர்பாராத விதமாக அவனது தொண்டைக்குள் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்ட இக்கட்டான கட்டத்தில் சிறுவன் ஆர்யன் மயங்கி விழுந்துள்ளான். பதறிப்போன பெற்றோர் அவனை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆசையாகக் கொண்டாடிய கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கண் இமைக்கும் நேரத்தில் ஒரு வீட்டின் துக்க நாளாக மாறிய இந்தத் துயரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உரைய வைத்துள்ளது. எதிர்காலக் கனவுகளுடன் இருந்த ஒரு பிஞ்சு உயிர் இப்படிப் பறிபோயுள்ள நிலையில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்குச் சிறிய முத்து மாலைகளையோ அல்லது வாயில் வைக்கக்கூடிய சிறிய அளவிலான பொருட்களையோ எக்காரணம் கொண்டும் அணிவிக்கக் கூடாது என்ற விழிப்புணர்வு எழுந்துள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர்கள் எவ்வளவு உஷாராக இருக்க வேண்டும் என்ற விவாதத்தையும் இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
சிறுவயது குழந்தைகளை இதுபோன்ற விழாக்களுக்காக அலங்கரிக்கும் போது பெற்றோர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எளிய பொருட்களினால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமானது என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.