இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதல் ... 2 இளைஞர்கள் பரிதாப பலி!
திருநெல்வேலி அருகே பத்தமடை சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலச்செவல் பகுதியைச் சேர்ந்த சந்துரு (25) என்பவர் தனது நண்பர் லெட்சுமணனை (20) பின்னால் அமர வைத்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனத்தில் சென்றுள்ளார். அவர்கள் சேரன்மகாதேவி அருகே பத்தமடை சாலையில் சென்றபோது விபத்து நேரிட்டுள்ளது.
அதே நேரத்தில் எதிர்த்திசையில் கோபாலசமுத்திரத்தைச் சேர்ந்த மகேஷ் (27) என்பவர் தனது நண்பரான அந்தோணிராஜை (20) பின்னால் அமர வைத்துக்கொண்டு வந்துள்ளார். அதிவேகமாக வந்த இருவரின் வாகனங்களும் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தின் கடுமையான தாக்கத்தால் இருசக்கர வாகனங்களில் பயணித்த நான்கு பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டுப் பலத்த காயமடைந்தனர்.
அவர்களில் தலையில் பலத்த காயமடைந்த சந்துரு மற்றும் மகேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் படுகாயமடைந்த மற்ற இருவரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.