'பைக் டாக்சிகளுக்கு கொள்கை முடிவு வரை அனுமதி கிடையாது' - நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!
தமிழ்நாட்டில் பைக் டாக்சிகளை அனுமதிப்பது குறித்து விரிவான கொள்கை முடிவு எடுக்கும் வரை பைக் டாக்சிகளுக்கு அனுமதி கிடையாது என்றும், விதிகளை மீறினால் அபராதம் உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடரும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தமிழக அரசு உறுதியாகத் தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர். நவீன்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார். "ராபிடோ, ஓலா, உபர் போன்ற செயலி சார்ந்த பைக் டாக்சிகள் சாமானிய மக்கள் மற்றும் மாணவர்களுக்குக் குறைந்த கட்டணப் பயணமாகவும், இளைஞர்களுக்குப் பகுதிநேர வாழ்வாதாரமாகவும் உதவுகின்றன. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு பைக் டாக்சிகளை ஒழுங்குமுறைப்படுத்தத் தனியாக விதிகளை உருவாக்க வேண்டும்; ஓட்டுநர்கள் மீது மட்டும் அபராதம் விதித்துப் பறிமுதல் செய்வது நியாயமற்றது" எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நீதிமன்ற விசாரணையின் போது அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், பைக் டாக்சிகளை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப் போக்குவரத்து, நிதித்துறை மற்றும் 'கும்டா' அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அரசு இதுகுறித்து விரிவான கொள்கை முடிவு எடுக்கும் வரை தமிழ்நாட்டில் பைக் டாக்சிகளுக்குச் சட்டப்பூர்வ அனுமதி கிடையாது எனவும், தடையை மீறி இயக்கினால் தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் அமர்வு, "பைக் டாக்சிகளுக்குத் தற்போது அனுமதி இல்லை என்றால், அதனைப் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரசு ஏன் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையோ விளம்பரங்களையோ மேற்கொள்ளக் கூடாது?" எனக் கேள்வி எழுப்பினர்.
பைக் டாக்சி பயணத்தின் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏதும் நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது? பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், பைக் டாக்சிகளுக்கு அனுமதி வழங்குவதா அல்லது நிராகரிப்பதா என்பது குறித்து அரசு விரைந்து தெளிவான கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.