AI தொழில்நுட்பத்தால் கொரோனாவை விட மோசமான பாதிப்பு ஏற்படலாம் – பில் கேட்ஸ் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பல்வேறு நன்மைகளை அளித்தாலும், அதனைத் தவறாகப் பயன்படுத்தினால் மிகப்பெரிய ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்று மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார்.
லண்டனில் நவம்பர் 4-ம் தேதி நடைபெற்ற Financial Times Future of AI Summit நிகழ்ச்சியில் பேசிய அவர், சக்திவாய்ந்த AI மாடல்கள் இணையத்தில் எளிதாகக் கிடைப்பது குறித்துக் கவலை தெரிவித்தார். பல்வேறு பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் இல்லாமல் கிடைக்கும் AI தொழில்நுட்பத்தைத் தீய நோக்கம் கொண்டவர்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, AI உதவியுடன் புதிய நோய்க்கிருமிகளை உருவாக்கி, அவற்றை உயிரியல் ஆயுதங்களாகப் பயன்படுத்தும் அபாயம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய உயிரியல் தாக்குதல் ஏற்பட்டால், அதன் பாதிப்பு கொரோனா பெருந்தொற்றைவிடப் பல மடங்கு மோசமாக இருக்கக்கூடும் என்றும் எச்சரித்தார்.
AI நிறுவனங்கள் தாங்களாகவே பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவது மட்டும் போதாது என்றும், அரசாங்கங்கள் சட்டங்கள் மற்றும் கண்காணிப்பு முறைகள் மூலம் AI தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பில் கேட்ஸ் வலியுறுத்தியுள்ளார். அதே நேரத்தில், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் AI மூலம் கிடைக்கும் நன்மைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.