பிறந்தநாள் பரிசு... தோழனுடன் வீடியோ காலில் பேசிய படியே தற்கொலை!
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அல்வால் பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண்மணி ரேணுகா ஆவார். இவருக்கு திருமணமாகி 7 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து கொண்டு அங்குள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரேணுகா கடந்த புதன்கிழமை அதிகாலை 3 மணி அளவில் லங்கர் ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் ஷேக் என்ற நபருடன் வந்து அறை எடுத்துத் தங்கியுள்ளார்.
அங்கு இருவரும் ஒன்றாக மதிய உணவு சாப்பிட்ட பின்னர், வியாழக்கிழமை இரவு 10:30 மணி அளவில் ஷேக் மட்டும் ஹோட்டலில் இருந்து தனியாகப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அதன் பின்னர் நள்ளிரவு 12:18 மணி அளவில் ரேணுகா, சத்யா என்ற தனது நெருங்கிய தோழனுக்கு வீடியோ கால் மூலம் அழைத்துப் பேசியுள்ளார். அப்போது மது அருந்த வேண்டாம் என சத்யா அறிவுறுத்திய நிலையில், ஜூலை 4 ம் தேதி வரவிருக்கும் அவனது பிறந்தநாளுக்குப் பரிசாகத் தனது உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாகக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
வீடியோ கால் பேசிக் கொண்டிருக்கும் போதே ரேணுகா திடீரென ஹோட்டல் அறையின் மின்விசிறியில் தூக்கிட்டுப் பரிதாபமாகத் தற்கொலை செய்துகொண்டார். இதனால் பதறிய சத்யா உடனடியாக ஹோட்டல் நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்துவிட்டு அங்கு விரைந்த போதிலும், ரேணுகா அதற்குள் பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொடூரச் சம்பவம் குறித்து லங்கர் ஹவுஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ரேணுகாவுடன் தங்கியிருந்த ஷேக் மற்றும் அவரது சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.