பர்த்டே பார்ட்டியில் விபரீதம்... மதுபோதையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 4 சிறுவர்கள் கைது!

 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது 15 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோழனின் பிறந்தநாள் என்று நம்பிச் சென்ற சிறுமிக்கு, அங்கிருந்த நண்பர்களே எமனாக மாறியுள்ள சம்பவம் மனிதநேயத்தை உலுக்கியுள்ளது. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 4 சிறுவர்களைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

ராஞ்சி அருகே உள்ள நம்கும் பகுதியைச் சேர்ந்த அந்தச் சிறுமி, கடந்த மார்ச் 31-ம் தேதி தனது நெருங்கிய நண்பனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்டுள்ளார். அங்கு வந்திருந்த 15 முதல் 17 வயதுடைய இதர நண்பர்கள் அனைவரும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. மது போதையில் நிதானம் இழந்த அந்த 4 சிறுவர்களும் சேர்ந்து, பாதுகாப்பிற்குத் துணையாக இருப்பார்கள் என்று நம்பிய தோழியையே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத சிறுமி, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கடந்த 16-ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றவுடன் விரைந்து செயல்பட்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட 4 சிறுவர்களையும் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். "கொண்டாட்டங்களுக்காகச் செல்லும் இடங்களில் கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாதது வேதனை அளிக்கிறது" என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.