திருச்செந்தூர் கோயிலுக்குள் கேக் வெட்டி பர்த் டே பார்ட்டி - 4 ஊழியர்கள் பணியிடை நீக்கம்... நிறுவனத்திற்கு ₹1 லட்சம் அபராதம்!

 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடிய விதிமீறல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாதுகாப்பு நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்திற்குள் தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கோயில் நிர்வாகம் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கும், வரிசையில் காத்திருப்பதற்கும் பிரத்யேக அறைகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 3ம் தேதி நள்ளிரவு 12 மணியளவில், அங்குள்ள ஒரு அறையில் தனியார் பாதுகாப்பு நிறுவன மேலாளர் ஐயப்பன் என்பவருக்கு அவரது நண்பர்கள் கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.

கோயில் போன்ற புனிதமான இடத்திற்குள் இத்தகைய கொண்டாட்டங்கள் நடத்துவது ஆகம விதிகளுக்கு எதிரானது எனப் பக்தர்கள் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து, கோயில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய கோயில் நிர்வாகம் முதற்கட்டமாக மேலாளர் ஐயப்பன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். விசாரணையைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 4 ஊழியர்கள் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மற்ற ஊழியர்களுக்குத் தண்டனையாக அவர்களின் ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற புனிதத் தன்மையைக் கெடுக்கும் செயல்கள் நடக்காமல் இருக்க, அந்தத் தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு ₹1,00,000 அபராதம் விதித்துத் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

விசாரணையின் போது, "பக்தர்கள் யாரும் இல்லாத நேரத்தில், யாருக்கும் இடையூறு இன்றித் தான் கொண்டாடினோம்" என ஐயப்பன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், கோயில் விதிகளின்படி அது தவறு என்பதால் நடவடிக்கை உறுதி செய்யப்பட்டது.