தலைமைச் செயலகத்தில் குறைந்த விலையில் பிரியாணி - அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்!
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் 'குயிக் பைட்ஸ்' என்ற புதிய உணவகத்தை மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்துள்ளார்.
தலைமைச் செயலக ஊழியர்கள் மற்றும் அங்கு வரும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், இந்தச் உணவகத்தில் மிகக் குறைந்த விலையில் சுவையான பிரியாணி மற்றும் சிற்றுண்டி வகைகள் விற்பனை செய்யப்பட உள்ளன. புதிய உணவகத்தை முறைப்படி திறந்து வைத்த அமைச்சர் ராஜேஷ்குமார், அங்குள்ள உணவுப் பொருட்களின் தரத்தையும் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்: தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் இயக்கப்பட்டு வந்த திருப்பதி ஆன்மிகச் சுற்றுலாப் பயணம் கடந்த 2024-ஆம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தச் சுற்றுலாச் சேவையை மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்குமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ஆந்திர மாநில அரசு அதிகாரிகளுடன் பேசித் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.