பாஜக பெண் கவுன்சிலர் தற்கொலை - தென்காசியில் சோகம்!
தென்காசி நகராட்சியின் பாஜக பெண் கவுன்சிலர் சுனிதா (45) குடும்பத் தகராறு காரணமாக விஷம் அருந்தி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி புலிக்குட்டி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த முத்து கோபாலகிருஷ்ணன் என்பவரின் மனைவி சுனிதா. இவர் தென்காசி நகராட்சியின் 23-வது வார்டு பா.ஜ.க கவுன்சிலராக பணியாற்றி வந்தார். இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே குடும்பப் பிரச்சினை காரணமாகத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சுனிதா தனது மகளைக் கண்டித்தபோது, அதற்கு அவரது கணவர் கோபாலகிருஷ்ணன் மகளுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். இதனால் மன விரக்தியடைந்த சுனிதா கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். மன உளைச்சலில் இருந்த சுனிதா, தனது வீட்டின் மாடிக்குச் சென்று விஷம் அருந்தி மயங்கிக் கிடந்துள்ளார். உடனடியாக அவரைக் மீட்ட கணவர் கோபாலகிருஷ்ணன், சிகிச்சைக்காகத் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். இருப்பினும், அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி சுனிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தென்காசி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த கவுன்சிலர் சுனிதா, சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து திருமணத்திற்குப் பின் தென்காசியில் வசித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.