"பாஜக, திமுக, அதிமுக எல்லாம் ஒன்றுதான்" - மதுராந்தகம் கூட்டத்தில் விஜய் கடும் தாக்கு!
மதுராந்தகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் விஜய், திமுக, பாஜக, அதிமுக ஆகிய மூன்று கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுராந்தகத்தில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், தேசியக் கட்சியான பாஜகவும், பிராந்தியக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவும் தங்களுக்குள் எந்தவித வித்தியாசமும் இல்லாமல் ஒன்றுபோலவே செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார்.
தீயசக்தியான திமுகவை எதிர்த்துப் போராடித் தொடங்கப்பட்டதாகக் கூறிக்கொள்ளும் அதிமுக, இன்று அதே திமுகவுடன் மறைமுகக் கூட்டு வைத்துக் கொண்டு செயல்பட்டு வருவதாக அவர் சாடினார்.
"டெல்லியில் உள்ள திமுகதான் பாஜக, தமிழ்நாட்டில் உள்ள பாஜகதான் திமுக" என்று குறிப்பிட்ட அவர், இரண்டு கட்சிகளும் மக்களுக்கு எதிராக ஒரே மாதிரியான அரசியல் தந்திரங்களைக் கையாண்டு வருவதாகத் தெரிவித்தார்.
தவெக ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கலையும் என்று எதிர்க்கட்சிகள் கூறிவரும் வதரிகளுக்குப் பதிலளித்த அவர், தவெக ஆட்சியின் உண்மையான உரிமையாளர்கள் நீங்கள்தான் (மக்கள்தான்), எனவே ஆட்சியைப் பற்றி எதிரிகள் காணும் பகல் கனவு எப்போதுமே பலிக்காது என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.